சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்திருப்பதாக வரும் செய்திகள் சர்வதேச அளவில் ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருக்கின்றன. புதிய, கவலையளிக்கும் திரிபுகளை பற்றி தெரிந்து கொள்ள இந்திய சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 மரபணு கூட்டமைப்புக்கு (INSACOG) வைரஸ் பாசிடிவ் மாதிரிகளை அனுப்பச் சொல்லி இந்திய சுகாதார அமைச்சரவை மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நிலை குறித்து ஆய்வு செய்யும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர். இந்தியாவின் இதுவரையிலான அதிகாரப்பூர்வ தரவுகள், பெரிதாக கவலைப்பட ஒன்றுமில்லை என்று கூறுகின்றன. தற்போதைய நிலைப்படி, 3408 பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள். சமீபத்திய வாராந்திர தரவுகளின் படி, ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டுமே 10 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்படுகிறது. நான்கு மாவட்டங்களில் இது 5 முதல் 10 சதவிகிதம் வரையில் இருக்கிறது. இந்தியாவில் 219.33 கோடி மக்களுக்கும் மேல் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் நெருக்கடி நிலை இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், முந்தைய ஆண்டுகளின் அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது, வழக்கமாக பல வாரங்களுக்குப் பிறகே குறிப்பிடத்தகுந்த அளவில் ஒரு கூர்மையான அதிகரிப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அலை என்பதெல்லாம் கூட அடுத்த கட்டம்தான். கண்காணிப்பு பெரிய அளவில் இல்லை. பொது மக்கள் கூடும் இடங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதில்லை. எனவே, குறைந்த எண்ணிக்கை என்பதற்கு புதிய மாறுபாடுகள் இல்லை என்பது பொருள் இல்லை.
சீனாவைப் பொறுத்தவரையில், சவக் கிடங்குகளில் உள்ள நெரிசல்கள், மருத்துவமனைகளில் சேர்க்கைகள் அதிகரிப்பது, மருந்துக் கிடங்குகளில் மருந்து இல்லாத நிலை என்பது போன்ற செய்திகள் தொடர்ந்து வந்தாலும், அதிகாரப்பூர்வமாக மரண எண்ணிக்கைகள் ஒற்றை இலக்கத்திலேயே இருக்கின்றன. மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலில் இருந்த மூன்றாண்டுகளுக்கு பிறகு அந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், “இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி” இல்லாத பெருமளவிலான மக்களை அது பாதிப்புக்குள்ளானவர்களாக மாற்றியிருக்கிறது என்பதுதான் பரவலான கருத்து. சில கணித மாதிரி கணிப்புகள், அனேகமாக எதிர்வரும் நாட்களில் சீனாவில் ஒரு மில்லியன் கோவிட்-19 நோயாளிகள் இருப்பார்கள் என்று கணக்கிடுகின்றன. பயணம் போன்ற விஷயங்களில் பெரும்பாலான உலகம் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, இந்த கோவிட் எழுச்சி சர்வதேச அளவில் எதிரொலிக்க வாய்ப்பு இருப்பதுதான் இப்போதைய கவலை. இன்னும் பல தொற்றுகள் உருவாகும் என்கிற கவலை இந்தியாவிலும் தவிர்க்க முடியாததுதான். சீன அனுபவத்திலிருந்து பெறக் கூடிய முக்கியமான பாடங்கள் இரண்டு. நீண்ட ஊரடங்குகள் வைரஸை அகற்றவோ புதிய திரிபுகள் உருவாவதை தடுக்கவோ செய்யாது. கடுமையான நோய்க்கு எதிராக சாத்தியமான ஒரே நியாயமான பாதுகாப்பு என்பது, தடுப்பூசிகள் மட்டுமே. செயலிழக்கப்பட்ட வைரஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ரோனாவாக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகள் போன்ற உள்நாட்டில் வளர்க்கப்படும் தடுப்பூசிகளைதான் சீனா பெரும்பாலும் சார்ந்துள்ளது. மக்கள் தொகையில் 90% பேர் ஒரு டோஸையும், பாதி பேர் இரண்டாவது டோஸையும் பெற்றிருந்தாலும், சீனாவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தவிர்க்க இயலாதது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவுக்கான பெரிய பாடம் என்பது, தற்போதுள்ள கொரோனா வைரஸ் மாறுபாடுகளை கண்டறிவது மட்டுமல்லாமல், செலுத்தப்படும் தடுப்பூசிகள் தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை பார்ப்பதும் ஆகும். செலுத்தப்படும் தடுப்பூசிகளில் பெரும்பாலானவை கோவிஷீல்ட் – அதாவது ஸ்பைக் புரதம் என்பதால் – வைரஸில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிலெடுக்க வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். INSACOG மூலம் திரிபுகளை வரிசைப்படுத்துவது ஒரு கல்விசார் பயிற்சியாக மட்டும் இருக்க கூடாது.
This editorial has been translated from English, which can be read here.
Published - December 22, 2022 11:32 am IST