ஐரோப்பாவில் சமீபகாலமாக வலதுசாரி கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றுவரும் நிலையில் அந்தப் போக்கிற்கு மாறாக, டென்மார்க்கின் வாக்காளர்கள் செவ்வாய் கிழமையன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தங்களது மத்திய - இடதுசாரி பிரதமர் மெட் ஃபிரெட்ரிக்ஸனுக்கு வெற்றியை வெகுமதியாகத் தந்தார்கள். கூட்டணிக் கட்சியினரின் அழுத்தத்தால் முன்கூட்டியே தேர்தலை நடத்திய திருமிகு. ஃபிரெட்ரிக்ஸன், 27.5 சதவிகித வாக்குகளைப் பெற்று இருபது ஆண்டுகளில் கிடைத்திராத ஒரு சிறந்த வெற்றியை சமூக ஜனநாயகவாதிகளுக்கு ஈட்டித் தந்தார். அவர் தலைமையேற்ற இடதுசாரி அணி, டென்மார்க்கின் பிரதான நிலப்பரப்பில் 87 தொகுதிகளை வென்றிருக்கிறது. ஃபரோ தீவுகளில் ஒரு தொகுதியும் டென்மார்க்கின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தில் இரண்டு தொகுதிகளும் வென்றிருப்பதன் மூலம் 179 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 90 உறுப்பினர்களை பெற்று அது தனது வலிமையை அதிகரித்திருக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் மில்லியன் கணக்கான மிங்கு மிருகங்களை கொல்ல எடுத்த திருமிகு. ஃபிரெட்ரிக்ஸனின் முடிவு பற்றிய விமர்சனங்களுக்கிடையில் நடந்த இந்தத் தேர்தலில், அவருக்கு பின்னடைவே ஏற்படும் என்று கருத்து கணிப்பாளர்கள் நினைத்தார்கள். அருகிலிருந்த நார்டிக் நாடான சுவீடனிலும் தென் ஐரோப்பாவின் இத்தாலியிலும் செப்டம்பர் மாதத்தில் நடந்த தேர்தல்களில் தீவிர வலதுசாரி கட்சிகளே நிறைய ஆதாயங்களைப் பெற்றிருந்தன. சுவீடனில் மத்திய-இடது அரசாங்கத்தை, புதிய நாஜி பாரம்பரியத்தில் வந்த ஒரு வலதுசாரி கட்சி வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. இத்தாலியைப் பொறுத்தவரையில் முசோலினியின் பாசிசக் கட்சியோடு நேரடியான தொடர்புகளைக் கொண்ட ஒரு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நேர் மாறாக, பெரும்பாலான டென்மார்க்கின் வாக்காளர்கள் சமூக ஜனநாயகவாதிகள், பசுமை இடதுசாரிகள் மற்றும் சமூக தாராளவாதிகள் பின்னால் உறுதியாக நின்றார்கள்.
டென்மார்கின் அரசியலில் உள்ள வலது-இடது பிரிவுகளைத் தாண்டி மிதமான மையக் கட்சிகளைக் கொண்ட ஒரு அரசை அமைக்கப் போவதாக தேர்தல்களுக்கு முன்பு சொன்னார் திருமிகு. ஃபிரெடிரிக்ஸன். ஆனால் இப்போது அரசு அமைப்பது அவருடைய பெரிய கவலையாக இருக்காது. பெரும்பாலான ஐரோப்ப நாடுகளைப் போல டென்மார்க்கும் விலைவாசி உயர்வோடு போராடி வருகிறது. 11.1 சதவிகிதத்தில் இருக்கும் டென்மார்க்கின் பண வீக்கம் ஐரோப்ப யூனியனின் சராசரி பண வீக்கத்தைவிட அதிகம். ரஷ்ய-யுக்ரைன் மோதலையடுத்து எரிசக்தி பொருட்களின் நிலை இன்னும் பதற்றமாக இருப்பதால், எரிவாயு தொடர்ச்சியாக வழங்கப்படுவது தடைபடுவது பற்றிய கவலைகளும் இருக்கின்றன. நேட்டோவை தொடங்கிய நாடுகளில் ஒன்றான டென்மார்க், பிற நேட்டோ உறுப்பினர் நாடுகளுடன் சேர்ந்து பாதுகாப்புக்கான செலவை அதிகரிக்க வேண்டிய அழுத்தத்திலும் இருக்கிறது. குறிப்பாக போர் தொடங்கிய பிறகு இந்த அழுத்தம் அதிகரித்திருக்கிறது. நோர்ட் ஸ்ட்ரீம் ரஷ்யா-ஐரோப்பா கடலுக்கு அடியில் உள்ள குழாய்கள் செப்டம்பர் மாதம் டென்மார்க்கின் கடற்கரைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்புகளில் சேதமடைந்திருந்த நிலையில், இந்தப் போரும் வந்துவிட்டது. இடதுசாரி கூட்டணியின் வெற்றி திருமிகு. ஃபிரெடிரிக்ஸனை அரசியல் ரீதியாக வலுப்படுத்தினாலும், தீவிர வலதுசாரி பிரச்னையிலிருந்து டென்மார்க் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. புகலிடம் கோருபவர்களை சட்டவிரோதமாக பிரித்த குற்றசாட்டில் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சரின் தலைமையில் புதிய தீவிர வலதுசாரி கட்சியான டென்மார்க் டெமாகிரட்ஸ் 8.1 சதவிகித வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறது. அதனால் திருமிகு.ஃபிரெடிரிக்ஸனுக்கான பணி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இப்போது அவர் வலிமையானவராக தெரியலாம், ஆனால் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்தான். அரசியல் வெற்றியை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ள விலைவாசி உயர்வுப் பிரச்னையை அவர் சரி செய்யத் தொடங்க வேண்டும். டென்மார்க்கின் பொது மக்கள் மீது போரின் தாக்கங்கள் மிகக் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE