கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் பதவியில் நீடிப்பதற்கான தனது விருப்பத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அறிவித்திருக்கிறார். முதல்வர் பினராயி விஜயனிடமிருந்து அரசியலமைப்புக்கு ஏற்ற நடவடிக்கையையும் எதிர்பார்க்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், தேசவிரோத, தேச ஒற்றுமையை குலைக்கும், பிராந்திய உணர்வைத் தூண்டும் என அவர் கருதும் கருத்துக்களுக்காக திரு.பாலகோபாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திரு.கான் நினைக்கிறார். ஆனால் திரு.விஜயன் இந்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறார். உத்திர பிரதேசத்தில் உள்ள பல்கலைகழகங்களை மட்டும் பார்த்தவர்களுக்கு கேரளாவின் பல்கலைகழகங்கள் பற்றி புரியாது என்கிற பார்வையை தேச விரோதம் அல்லது தேச ஒற்றுமைக்கு எதிரானது என்ற ஆளுநரின் கருத்துடன் ஒத்துப்போவது கடினம்தான். ஒரு சாதாரண சூழலில், ஒரு அமைச்சரின் நடத்தை சார்ந்து ஆளுநர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும்போது, அது கணிசமான மதிப்பைக் கொண்டிருக்கும். ஆனால், ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையில் நடக்கும் மோதலின் பின்னணியில் இம்மாதிரி கருத்து வெளியாகும்போது, அது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. ஒரு அமைச்சரின் பதவிக்காலம் என்பது ஆளுநர் விரும்பும்வரைதான் என அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுவது, ஒரு உறுப்பினர் தனது அமைச்சரவையில் தொடரலாமா, வேண்டாமா என்பது பற்றிய முதல்வரின் விருப்பத்தைதான் உண்மையில் குறிப்பிடுகிறது என்று சொல்லத் தேவையில்லை. ஆனால், இந்த அரசியலமைப்பு நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர் நியமனங்கள் பற்றிய சர்ச்சையை ஒதுக்கித்தள்ளலாம் என்பதில்லை. திருவனந்தபுரத்தில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு, அதே மாதிரியான சட்ட பலவீனங்களை கொண்ட நியமனங்களாக தான் நம்பிய ஒன்பது பல்கலைக்கழக துணை வேந்தர்களை திரு. கான் பதவிவிலகச் சொன்னார். உச்ச நீதிமன்ற வழக்கில் இருப்பதைப் போலவே, இந்தத்
துணைவேந்தர்களை தேர்வுசெய்வதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுக்கள் ஒரே ஒரு நபரை பரிந்துரை செய்து, அதன் அடிப்படையில் நடந்த நியமனங்கள். தேர்வுக் குழுக்கள் 3 அல்லது 4 பெயர்களை பரிந்துரைக்க வேண்டுமென பல்கலைக்கழக மானிய குழு கூறியிருக்கிறது. வேறு சில துணைவேந்தர் நியமனங்கள், மாநிலத்தின் தலைமை செயலாளரை உள்ளடக்கிய குழுக்களால் நடந்த நியமனங்கள். அவர்களது பதவி விலகலுக்கு மிகக் குறுகிய காலக்கெடுவை ஆளுநர்/வேந்தர் விதித்தது சரியில்லைதான். பிறகு, அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களையே, விளக்கம் கோரும் நோட்டீஸ்களாக மாற்றி, அவர்களது நியமனங்கள் ஏன் சட்டவிரோதமாக கருதப்பட கூடாது என்று பதிலளிக்கும்படி கூறினார். ஒரு துணை வேந்தருக்கான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தன்னிச்சையாகவே எல்லா துணை வேந்தர்களுக்கும் பொருந்துமா என்பது சட்டரீதியான வேறு கேள்வி. வழக்குகளுக்கு இடம் கொடுக்கும் என்கிற அடிப்படையில், கேரளாவின் பல்கலைக்கழக விதிகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் கொண்டு வரப்படுவது எவ்வளவு விரைவாக நடக்கிறதோ அவ்வளவு நல்லது. ஆளுநர்கள்-வேந்தர்கள், பல்கலைக்கழக பிரச்னைகளை கையாள்வதற்கான அவர்களது சட்டப்பூர்வ அதிகாரங்களை ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டம் வரையறைக்கும் பொறுப்புடன் சேர்த்து வைத்துப் பார்க்க கூடாது என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. ஆளுநர்கள் வெளிப்படையாகவே அரசியல் செயல்பாட்டை கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு வேந்தர்களாகவும் பொறுப்பு தரப்படக்கூடாது என்பதை வலுவாக வலியுறுத்துகிறது இந்த பிரச்னை.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE