கண்ணெதிரில் அப்பட்டமாக சட்ட மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கிறது என்பதை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. இறுதியில், தலையீடு நிகழும் போது பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு பயன்படாத அளவுக்கு தாமதம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது இதற்கான உதாரணமாக இருப்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமம். இல்லத்தின் இருண்ட ரகசியங்களும் நடவடிக்கைகளும் முற்றிலும் தற்செயலாகவே வெளிவந்திருக்கின்றன. காவல்துறை காணாமல் போன ஒருவர் பற்றிய புகாரை விசாரிக்கும் போதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பிறகு ஒன்றின் பின் ஒன்றாக மோசமான உண்மைகள் வெளிவந்தன. பாலியல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல், விபரீதமான அச்சுறுத்தும் வியூகங்கள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற உண்மைகளும் வெளிவந்திருக்கின்றன. அன்பு ஜோதி என்று அழைக்கப்பட்ட உரிமம் பெறாத இந்த இல்லம் சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு, உடல்ரீதியாக சமூகரீதியாக ஆதரவு தேவைப்படும் நபர்களுக்கு தங்குமிடம் வழங்கிக் கொண்டிருந்தது. ஆதரவற்ற பெண்கள், கைவிடப்பட்ட மூத்த குடிமக்கள், பிச்சைக்காரர்கள், மதுவுக்கு அடிமையானவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த ஆசிரமத்தில் தங்கி வந்தார்கள். இங்கிருந்து பின்னர் மீட்கப்பட்ட நபர்கள், அச்சுறுத்தலும், தீவிரத்தன்மையும் வக்கிரமும் சேர்ந்த மிரட்டல்களால் அவர்கள் எப்படி அடக்கி வைக்கப்பட்டார்கள் என்று கதை கதையாக சொன்னார்கள். இல்லங்களை நடத்துபவர்கள் அங்கு தங்கியிருப்பவர்களை குரங்குகளை வைத்து கூட மிரட்டியிருக்கிறார்கள். முறையான அனுமதி இல்லாமல் இல்லத்தை நடத்தியதற்காக நான்கு ஊழியர்களை கைது செய்ய காவல்துறை அதன் வளாகத்துக்குள் நுழையும் வரையில் இல்லம் பல வருடங்களாக இயங்கியே வந்திருக்கிறது. அங்கிருந்து மொத்தம் 142 நபர்கள் மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அங்கு தங்கியிருந்த பெண்கள் உரிமையாளர் ஜுபின் பேபி மீதும் அவரது மனைவி மரியா மீதும் பாலியல் வன்கொடுமை
மற்றும் சித்திரவதை குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையில், காவல்துறையினர் அந்த தம்பதியை கைது செய்தார்கள். புதுச்சேரி அருகில் அவர்கள் நடத்தி வந்த மற்றொரு இல்லமும் மூடப்பட்டு 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக தேசிய மகளிர் ஆணையம் மீட்கப்பட்ட பெண்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றது. விசாரணை சிபி-சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
சட்டம் வழங்கியிருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளையும் அரசால் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதிகளையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு போன்ற ஒன்று ஒருபோதும் நடந்திருக்கவே கூடாது. அனைத்து பராமரிப்பு இல்லங்களும் பதிவு செய்யப்பட்டு அவை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க அவ்வப்போது மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த இல்லம் எப்படி இதிலிருந்த விரிசல்கள் வழியாக நழுவியது? மோசமான சூழலில் உள்ள நபர்களின் சேவைகளுக்கான சட்டங்கள் எந்த ஓட்டையையும், சுரண்டப்படக் கூடிய எந்த விரிசலையும் விட்டுவைக்க கூடாது. அவர்களின் தகுதிகளை சரிபார்க்க அவ்வப்போது அறிவுறுத்தல்களும் சில நேரங்களில் பராமரிப்பு இல்லங்களில் சோதனைகளும் இருந்தபோதிலும், இந்த வழக்கு நிச்சயமாக இந்தத் துறையில் நிலவும் நீண்டகால புறக்கணிப்பைப் பேசுகிறது. சமூகத்துறையில் குறிப்பாக நிலவும் சுரண்டல் சகித்துக் கொள்ள கூடாதது. வேலியே பயிரை மேய்வது போல அது. இந்த துறையில் உள்ள கண்காணிப்பும் மேற்பார்வையும் ஊழலற்றதாகவும் எந்தவிதமான விரிசலுக்கும் இடம் தராததாகவும் இருக்க வேண்டும். ஆசிரமத்தில் நடந்த ஒவ்வொரு அப்பட்டமான அத்துமீறலையும் அதிகாரிகள் ஆவணப்படுத்துவது மட்டுமல்லாமல், அதை ஒரு உதாரணமாகவும் முன் வைக்க வேண்டும். அடைக்கலம் தேடுபவர்களை தவறாக பயன்படுத்தும் எண்ணம் சிறிதளவு இருந்தாலும், அத்தகையோருக்கான பெரிய தடையாக அது இருக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - February 21, 2023 11:48 am IST