தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர் பொறுப்பு மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021க்கான வரைவில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்காக மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் நடவடிக்கைகள் பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் உள்ளன. ஒரு சுயாதீன ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுதல், தொடர்புடையவரிடமிருந்து ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் (KYC)‘ தகவல்களை சேகரித்தல் மற்றும் நிறுவனத்துக்குள்ளேயே ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்தல் போன்ற, இந்த வரைவு முன்மொழிந்திருக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றன. இது போன்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் அமைப்புகள் ஊக்குவித்த நகர்வுகள் இவை. வரைவு மசோதாவில் மத்திய அரசால் முன்மொழியப்பட்டிருப்பதை விட துறையில் இன்னும் தீவிரமான ஒழுங்குமுறையை தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கோருகின்றன. குறிப்பாக, அசலான பணத்தை வைத்து சூதாட்டம் நடத்தும் விளையாட்டு போன்றவை தொடர்பாக இதைவிடக் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவை என்று நினைக்கின்றன. மாநிலங்கள் கூடுதலான கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா என்கிற கேள்விக்கு மத்திய அரசின் வரைவில் தெளிவான பதில் இல்லை. இதுவரை, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் திறன் சார்ந்த விளையாட்டுகளை தருவதாகவும் முற்றிலும் அதிர்ஷ்டம் சார்ந்து தங்கள் விளையாட்டு இருப்பதில்லை என்று வாதிடுவதன் மூலம் சட்ட சவால்களை முன் வைத்து பல தடைகளை தகர்த்திருக்கின்றன. அசலான பணம் வைத்து ஆடும் ஆட்டங்களைப் பொறுத்தவரையில் இந்த வாதம், மிக வலுவற்ற வேறுபாட்டையே முன்வைக்கிறது. ஆனாலும், காலனித்துவ பொது சூதாட்ட சட்டம், 1867ன் கீழ் அல்லது மாநிலங்களின் சொந்த சூதாட்டம் குறித்த சட்டங்களின் கீழ் பணம் வைத்து ஆடும் விளையாட்டுகளை நேரடியாக விளையாட தடையிருக்கிறது. நேரடியாக விளையாட தடை செய்ய முடிவது போல ஆன்லைனிலும் தடை செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது பற்றி மத்திய அரசு தெளிவான ஒரு பதிலை சொல்ல வேண்டும். இந்தியாவில் வளர்ச்சியின் பொருளாதார உந்துசக்தியாக விளையாட்டுசார் தொழில்துறைக்கு நிறைய ஆற்றல் இருந்தாலும், தீவிரமான ஒழுங்குமுறையும் முக்கியமான தேவையாக இருக்கிறது. திறமை அல்லது அதிர்ஷ்டம் என எதுவாக
இருந்தாலும், ஆன்லைன் விளையாட்டுகள் குறுகிய மற்றும் நீண்ட கால நோக்கில் தனிநபர்களையும் சமூகத்தையும் பாதிக்கவே செய்கின்றன. தற்போது பணம் வைத்து ஆடும் தளங்களுக்கு மட்டுமே “ஆன்லைன் விளையாட்டு” என்ற வரையறை பொருந்தும் என்ற அளவில் வரைவு திருத்தம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் அனைத்து ஆட்டங்களையும் பரவலாக சேர்க்க அது விரிவுப்படுத்தப்படலாம் என்று அரசு சொல்லியிருக்கிறது. உலகில் பல சமூகங்கள், இளைஞர்கள் மீது வீடியோ கேம்களின் விளைவுகளையும் சிலர் அதற்கு அடிமையாகியிருப்பதையும் எதிர்த்து போராடியிருக்கின்றன. உதாரணத்துக்கு சீனாவில் நாளொன்றுக்கு இளைஞர்கள் விளையாட குறிப்பிட்ட மணி நேரங்களை வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு அவர்கள் அந்த நாளில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட முடியாது. ஆனால் இந்தியாவில் அது போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கவனமும் கட்டுப்பாடும் தேவை. காரணம், அதனால் அரசு, இந்திய பார்வையாளர்களுடன் உள்ளூரிலுள்ள சின்ன விளையாட்டு தயாரிப்பாளர்களுக்கும் பெரிய சர்வதேச ஸ்டூடியோக்களுக்கும் சேர்த்து நிச்சயமற்றத் தன்மையை அறிமுகப்படுத்திவிடும். துறையை எளிதாக்குவதுதான் நோக்கமே தவிர, அதன் வளர்ச்சியை தடுப்பதில்லை என்று அரசு சொல்லியிருக்கிறது. எதிர்காலத்தில் வீடியோ கேம்களில் “வன்முறையான, அடிமையாக்கும் மற்றும் பாலியல்ரீதியான உள்ளடக்கத்தை” கட்டுப்படுத்தவும் அரசு முயற்சி எடுக்கும் என்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறது. பொருளாதார உரிமைகள், தனிநபர் சுதந்திரங்கள் மற்றும் சமூக கட்டுப்பாடுகள் சமநிலையில் இருப்பதை உறுதி செய்ய பரந்துபட்ட பொதுமக்கள் ஆலோசனை தேவை.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE