நிதிநிலை அறிக்கையை தயார் செய்வது சிக்கலான பணி என்றால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை புரிந்துகொண்டு விளக்குவது அபாயகரமான பணி என்று சொல்லலாம். காரணம், கவனமாக படிக்க வேண்டிய பகுதிகள் அவ்வளவு இருக்கின்றன. இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஐந்தாவது நிதிநிலை அறிக்கை. அடுத்த வருடம் வரவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்பு பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசின் கடைசி, முழுமையான நிதிநிலை அறிக்கையும்கூட. மேலோட்டமாகப் பார்த்தால் இதில் எல்லாம் சரியாக இருப்பது போலதான் தோன்றுகிறது. அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், இதர பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு செழிப்பை உறுதிசெய்யும் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கு பன்மடங்கு உதவும் உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டில் கவனம், பசுமையான அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் கொள்கைகள், நடுத்தர மற்றும் சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஏராளமான சலுகைகள் உட்பட நேரடி வரிகளை நியாயப்படுத்துதல், மிக முக்கியமாக, நிதி ஒருங்கிணைப்பின் போக்கைத் தக்கவைத்துக் கொண்டே இதையெல்லாம் செய்வது பற்றி நிதிநிலை அறிக்கை பேசுகிறது. “அமிர்த காலத்தின்” முதல் நிதிநிலை அறிக்கை என்று இதை குறிப்பிட்ட திருமிகு.சீதாராமன், 2014ல் பிரதமர் நரேந்திர மோதி முதன்முறையாக பதவியேற்றுக் கொண்ட பிறகு ஆளுங்கட்சி செய்த சாதனைகளை வலியுறுத்தி தேர்தலுக்கான மணியையும் ஒலிக்கச் செய்தார். உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியதன் விளைவாக தனிநபர் வருமானம் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து ரூ. 1.97 லட்சமாக உயர்ந்துள்ளது என்றார் அவர். அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்கான அரசின் முயற்சிகளைப் பற்றியும் பேசினார். பொருளாதாரத்தை முறைப்படுத்துவது அதிகரித்து வருவதையும், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பரவலாக குறிப்பாக பணம் செலுத்தும் துறைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையும் இன்ன பிற முக்கியமான சாதனைகளாக அவர் முன்னிறுத்தினார்.
‘100-ல் இந்தியா’ என்கிற பார்வையில், நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் முன்மொழிவுகள் “வலுவான பொது நிதி மற்றும் வலுவான நிதித் துறையுடன் கூடிய தொழில்நுட்பம் சார்ந்த, அறிவு அடிப்படையிலான பொருளாதாரத்தை” செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று திருமிகு.சீதாராமன் சொன்னார். இந்த தொலைநோக்கு லட்சியத்தை அடைவதற்கான பொருளாதார செயல்திட்டத்தை அமல்படுத்த வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு வலுவான உத்வேகம் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று சொன்ன அமைச்சர், பல்வேறு திட்டங்களை விவரிக்க இந்த அரசு பிரத்யேகமாக பயன்படுத்தும் சுருக்கெழுத்துகளை கனமானதாகவும் அசலான விவரங்களில் இலகுவானதாகவும் கொண்டிருந்த நிதிநிலை அறிக்கை முன்மொழிவுகளை முன் வைத்தார். எடுத்துக்காட்டாக, பி.எம் விகாஸ் அல்லது பிரதான் மந்திரி விஸ்வகர்மா கௌஷல் சம்மன் திட்டத்தின் கீழ் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்கள் அல்லது விஸ்வகர்மாக்கள், தங்கள் தயாரிப்புகளின் தரம், அளவு மற்றும் வரம்பை மேம்படுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்ட உதவிகளின் தொகுப்பை முதன்முறையாக வழங்கும் என்று அவர் கூறினார். ஆனால் இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தப்படும் விதம் குறித்த விவரங்களைக் குறிப்பிடப்படவில்லை. இதேபோல், கடற்கரையோரங்களிலும், உப்பள நிலங்களிலும் சதுப்புநில மாங்குரோவ் காடுகளை வளர்ப்பை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்ட ‘கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் நிலையான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி’ அல்லது ‘மிஷ்தி’ என்கிற திட்டத்துக்கான நிதி, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் ஈடுசெய்யும் காடு வளர்ப்பு திட்டத்துக்கான” ஒன்றிணைந்த நிதியிலிருந்து எடுக்கப்படும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கிராமப்புறத் துறையின் முக்கிய வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்துக்கு தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கை சார்ந்த உதவி கிடைக்காமல் இருக்கும் நிலையில், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கும் மீளுருவாக்கம் செய்வதற்குமான புதிய முன்முயற்சிக்கு எப்படி நிதியளிக்கப்படும் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாகத்தான் இருக்கிறது. கோவிட்-19ன் தாக்கத்திலிருந்து கிராமப்புற பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. அதேபோல, கடந்த வருட பருவமழை சீரற்ற முறையில் பெய்ததால் வருமானங்களில் ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்தும் மீள முடியவில்லை. மேலும், பின்தங்கிய பகுதிகளில் இருக்கும் குடும்பங்களில் ஒப்பீட்டளவில் அதிக உணவு பணவீக்கத்தின் அதிகமான தாக்கம் நிலவும் நிலையில்தான் நிதிநிலை அறிக்கையில் இதற்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.
பரந்த அளவில் பார்த்தால், 2023-24ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சிக்கான செலவினங்களுக்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீடு ரூ . 2.38 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சதவீதம் என்ற வகையில் பார்த்தால், இது முந்தைய நிதிநிலை அறிக்கையில் 5.2 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 5.3 சதவீதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது வெறும் 0.1 சதவீத மட்டுமே அதிகம். திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு எதிராக வைத்துப் பார்க்கும்போது, தற்போதைய ஒதுக்கீடு 0.6 சதவீதம் குறைவாக இருக்கிறது. உணவு மானியமும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. 1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், 2022-23 நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 5 சதவீதம் குறைவாகவும், திருத்தப்பட்ட மதிப்பீட்டிலிருந்து 31 சதவீதம் குறைவாகவும் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கோவிட் - 19க்குப் பிறகு நிதி ஒருங்கிணைப்பின் போக்கை அப்படியே தொடர வேண்டுமென்கிற அரசின் உறுதி, முன்னெப்போதும் இல்லாத பொருளாதார சுருக்கத்திற்கு மத்தியில் வரவுகள் குறைந்த போதிலும் அதிக செலவு செய்ய வழிவகுத்தது. இதனால், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு போன்ற பொது ஒதுக்கீட்டை அதிகரிப்பதில் அரசு தனது வளங்களை குவிக்கும் என்று அவர் முடிவு செய்தவுடன் செலவினங்களைப் பொறுத்தவரையில் திரு.சீதாராமனுக்கு ஒரு சின்ன தளர்வு கிடைத்தது. மூலதன செலவினங்களுக்கு ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்த நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டைவிட 33 சதவீதம் அதிகமாகும். மூலதனச் சொத்துக்களை உருவாக்குவதற்காக மாநிலங்களுக்கு மானியங்களுக்காக ஒதுக்கப்பட்ட கிட்டத்தட்ட ரூ .3.7 லட்சம் கோடியை சேர்த்துப் பார்த்தால், அரசின் மூலதன செலவுகளை பெருக்குவதற்கான சக்தியை, பொருளாதார நடவடிக்கையை தூண்டும் முதன்மை நெம்புகோலாக பயன்படுத்தும் அமைச்சரின் பாராட்டத்தக்க நோக்கம் தெளிவு. வளர்ந்த நாடுகளின் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த ஆண்டு உலகளாவிய தேவை நிச்சயமற்றதாக இருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்தியாவின் உள்நாட்டு சந்தை பொருளாதாரத்தின் அரணாக செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. தனிநபர் வருமான வரியில் பல மாற்றங்களைச் செய்வதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினரைக் கவரவும் திருமிகு. சீதாராமன் முயற்சித்துள்ளார். இது சுங்க வரிகளில் செய்யப்பட்ட மாற்றங்களுடன் சேர்ந்து, அரசுக்கு மொத்த நேரடி வரி வருவாயில் ரூ. 37,000 கோடி செலவாகும். இந்த மாற்றங்களில் சில ஊதியம் பெறுபவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் கைகளில் அதிக நிதி புழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிதிநிலை அறிக்கையை திட்டமிடுபவர்கள் இது சேமிப்பாகவோ அல்லது நுகர்வை நோக்கிய செலவினமாகவோ திரும்பும் என்று நம்புகிறார்கள். வருமான வரி மாற்றங்களின் மிகப்பெரிய பயனாளிகளாக அதிக வருமான வரம்பில் உள்ளவர்கள் இருக்கக்கூடும். அங்கு விகிதம் 3.74 சதவீத புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இது இந்த அரசு வசதி படைத்தவர்களுக்காக செயல்படுகிறது என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.
This editorial was translated from English, which can be read here.
COMMents
SHARE