இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமானது இரு வரையறைகளுக்கு உட்பட்டது என்பது நன்றாக அறியப்பட்ட ஒரு விஷயம். ஒன்று, நீதிமன்றத்தின் பரிசீலனை. அதாவது, அடிப்படை உரிமைகள் ஏதும் மீறப்பட்டிருக்கிறதா என அந்தச் சட்டத்தை அரசியல் சாசன நீதிமன்றங்கள் பரிசீலிக்கும் அதிகாரம் உண்டு. அடுத்தது, அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்படும் எந்த மாற்றமும் அதன் அடிப்படைக் கொள்கையை அழிக்கும் வகையில் இருக்க முடியாது. இதில், முதலாவது வரையறை பிரிவு 13ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவின்படி, அடிப்படை உரிமைகளுக்கு எதிரான அல்லது பொருந்தாத சட்டங்கள் செல்லாமல் போய்விடும். இரண்டாவது வரையறை, உச்ச நீதிமன்றம் உருவாக்கிய ‘அடிப்படைக் கட்டமைப்பு‘ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. 1973ஆம் ஆண்டின் கேசவானந்த பாரதி வழக்கில் முன்வைக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தங்கரின் கருத்துக்கள் சட்டத்தின் சரியான நிலையை பிரதிபலிக்கவில்லை. அவருடைய பார்வையின் படி பார்த்தால், அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு நாடாளுமன்றத்தின் இறையாண்மையைப் பறித்துக் கொள்கிறது என்பதோடு, தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றமே உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஜனநாயக அடிப்படைக்கும் மாறானதாக இருக்கிறது. அவருடைய ஒரு குறிப்பிட்ட கவலை நியாயமானதாகத் தோன்றுகிறது: நாட்டின் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் அமைப்பான தேசிய நீதித்துறை நியமன ஆணையம் உருவாவதை உச்ச நீதிமன்றம் தடுத்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கென செய்யப்பட்ட திருத்தத்தையும் இதற்கென நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டத்தையும் ரத்து செய்ததன் மூலம் உச்ச நீதிமன்றம் இதைச் செய்தது. ஆனால், நீதிபதிகளின் நியமனத்தில் தங்களுக்குப் போதுமான அதிகாரம் இல்லை என்பதால் தற்போதைய அரசு நீதித் துறை மீது நடத்திவரும் மோதலின் ஒரு பகுதியாக அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கை மீதான குடியரசு துணைத் தலைவரின் தாக்குதலை பார்க்காமல் இருப்பது கடினம்.
அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கை, நாடாளுமன்ற இறையாண்மையை குறைக்கிறது என்ற சிந்தனையே அடிப்படையில் தவறானது. தன்னளவில் நாடாளுமன்றத்திற்கு என ஒரு இறையாண்மை உண்டு. இருந்தாலும், அரசியலமைப்புச் சட்ட கட்டமைப்பு விதித்துள்ள வரையறைகளுக்கு அது கட்டுப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு எந்தவிதமான வரையறை இருப்பதும் திரு. தன்கருக்கு பிரச்சனையாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையைத் தவறாகப் பயன்படுத்தி அரசியலமைப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளை இந்த அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கைதான் தடுத்து வருகிறது என்பதை அவர் மறந்துவிட முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சில அடிப்படைக் கூறுகளை சட்டம் இயற்றி இல்லாமல் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகச் சில வழக்குகளில் மட்டுமே இந்தக் கொள்கையின் படி திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கையைத் தாண்டி பல திருத்தங்கள் நீடிக்கின்றன. நாடாளுமன்ற பெரும்பான்மை என்பது மாறக்கூடியது. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியக் கூறுகளான சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்ற பாணி அரசு, அதிகாரப் பகிர்வு, சமத்துவம் என்ற சிந்தனை, சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் போன்றவை அத்துமீறிச் சட்டமியற்றி அழிக்கப்படுவதிலிருந்து காக்கப்படுகின்றன. இன்னொரு அரசியலமைப்பு அவையை உருவாக்கி, அடிப்படைக் கோட்பாடுகளை மாற்றக்கூடிய இன்னொரு அரசியலமைப்புச் சட்டத்தை எழுதலாம். ஆனால், தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அடையாளத்தை மாற்ற முடியாது.
This editorial was translated from English, which can be read here.
COMMents
SHARE