Tamil

சரியான வகையில் 5ஜி அலைக்கற்றை விற்பனை

5ஜி சேவைகளை வழங்கக்கூடிய அலைக்கற்றைகள் உள்ளிட்ட தொலைதொடர்பு அலைக்கற்றைகளை இந்திய அரசு சமீபத்தில் ஏலம் விட்டபோது அவை 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏலம் போயிருப்பது தொழிற்துறை மீண்டு வருவதை தெளிவாகக் காட்டுகிறது. எதிர்பார்த்ததைப் போலவே 88,000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகைக்கு 48 சதவிகிதம் காற்றலைகளை பெற்று ரிலயன்ஸ் ஜியோ ஏலத்தில் முன்னணியில் வந்திருக்கிறது. அதில் பாதிக்கும் குறைவான நிதியில் விற்கப்பட்ட அலைக்கற்றைகளில் 39 சதவிகிதத்தை பார்தி ஏர்டெல் ஏலம் எடுத்திருக்கிறது. கடன் சுமையில் சிக்கியிருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம் 12 சதவிகிதம் அலைக்கற்றையை சுமார் 19,000 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்ததன் மூலம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

மிக வேகமாக வளர்ந்து வரும், செழிப்பான நிறுவனமான அதானி  குழுமம் சிறிய ஆனால் குறிப்பிடத்தகுந்த அளவிலான 5 ஜி சேவைகளுக்கு பொருத்தமாக கருதப்படும் 26 GHz பேண்ட் அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்திருப்பது ஒரு முக்கியமான, கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம். இது தனது நிறுவன வர்த்தகத்தின் சொந்த பயன்பாட்டுக்காகவே எடுத்திருப்பதாக அதானி குழுமம் தெரிவித்திருக்கிறது.

அலைக்கற்றைக்கான இருப்பு விலையாக அரசு நிர்ணயித்திருந்த 4.3 லட்சம் கோடி ரூபாயில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஏலத்தில் வந்திருந்தாலும், 71 சதவிகிதத்துக்கும் அதிகமான அலைக்கற்றைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பது துறையின் ஆரோக்கியமான போக்கையே காட்டுகிறது.  கடன்களுக்கு நான்காண்டு கால தவணைக் காலம், தொலைத்தொடர்புத் துறை தவிர்த்து வரும் வருமானங்களை விலக்கி வைத்துவிட்டு சீரமைத்தது என  கடனை திருப்பிச் செலுத்துவதற்கான விதிமுறைகளில் எளிமையைக் கொண்டு வந்ததன் மூலம் சேவை நிறுவனங்களுக்கு சற்று ஆசுவாசமளித்தது மத்திய அரசு. இதன் மூலம் முதலீட்டார்களின் கவனத்தை ஈர்த்ததோடு  அதிக கால அளவுக்கு கடனை நீட்டிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு இருந்தது.

தவிர, எல்லாத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே கட்டணங்களை உயர்த்தியதால் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குக் கிடைத்துவந்த தனி நபர் பயன்பாட்டு வருமானத்தின் சராசரி அதிகரித்து, லாபமும் அதிகரித்தது.  தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வங்கிகளில் அளித்திருந்த  பிணைகளை திருப்பித்தர அரசு முடிவெடுத்ததன் மூலம் அந்த நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை அதிகரித்தது. இது முதலீட்டு செலவுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணத்தை நீக்கியதன் மூலம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி கிடைத்தது மொத்தமிருந்த மூன்று தனியார் நிறுவனங்களும் அதிக ஈடுபாட்டுடன் இந்த ஏலத்தில் பங்கு கொள்ள உதவியது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இருப்பே கேள்விகுறியாக நிலையோடு ஒப்பிட்டுப்பார்த்தால், நீண்ட தூரம் வந்திருக்கிறோம்.

ஆனால் இந்த ஏலம் சில முக்கியமான பாடங்களையும் தந்திருக்கிறது. சில குறிப்பிட்ட அலைக்கற்றை பேண்டுகளுக்குக் கூடுதல் விலை நிர்ணயித்தது, அவற்றை ஏலம் எடுப்பதில் ஈடுபாட்டைக் குறைத்திருக்கக்கூடும்.  3.3 GHz மற்றும் 26 GHz போன்ற பேண்டுகள் பல இடங்களில் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டாலும், 600 MHzஐ யாரும் சீண்டவில்லை. 700 MHz அலைக்கற்றையில் 60 சதவிகிதம் விற்கப்படாமலேயே இருந்தது. 700 MHz கிராமங்களிலும் நகரப் பகுதிகளில் கட்டடங்களுக்கு உள்ளே தொடர்புகொள்ளவும் உதவிகரமாக இருந்திருக்கும்.

அலைக்கற்றை ஒரு விலைமதிப்பற்ற தேசிய வளம் என்று பார்க்கும்போது, அரசு அதனை பயன்பாடின்றி வைத்திருப்பது சரியாக இருக்காது. பதிலாக, இதற்கான விலையை சரியாக நிர்ணயிப்பதன் மூலம் அரசின் கருவூலமும் தொலைதூர ஊரகப் பகுதிகளில் வாழ்பவர்களும் பயனடையச் செய்யலாம்.

This editorial in Tamil has been translated from English which can be read here.


Our code of editorial values

This article is closed for comments.
Please Email the Editor

Printable version | Aug 15, 2022 11:07:16 am | https://www.thehindu.com/opinion/editorial/tamil/on-5g-spectrum-sale-the-hindu-editorial-dialling-right/article65761201.ece